Wednesday, 25 July 2012

நழுவி விழும் கவிதைகள்

சர்ப்ப நா நுனியென
முனை சிறுத்த
கூர் கத்தி கொண்டு
காயம் செய்து-பின்
கசியும் குருதி நிறுத்த
அழுத்தி அமத்தப்படும்
விரல்களினோடு
நழுவி விழுகின்றன
எனது கவிதைகளும்
சில
பூக்களும்.

Friday, 13 July 2012

வெயிலுக்கு வாழ்க்கைப்பட்ட

வெயிலுக்கு வாழ்க்கைப்பட்ட
என் ஊருக்கு சென்றிருந்தேன்.
பாதியிலே நிறுத்தப்பட்ட
ஓவியமாய்
வர்ணம் குன்றி மௌனம் காத்தது.
கூட்டம் தொலைத்ததொருபறவையென
சிறகுகள் விரித்தபடி
நடந்து செல்கிறேன்.
சரித்து வைக்கப்பட்டமிக நீண்ட
பியானோவைப்போல்
தெருவோர தொடர்மதில்கள்
என் பதின்வயது ராகங்களை
மீட்டியபடி.
காற்றில் பேரோசையுடன்
அலைகின்றன
என் நண்பர்கள் விட்டுச் சென்ற
வார்த்தைகள்.
அவர்கள் தந்து போன
இரவிலும் அழியா
வானவில் சித்திரம்..
என்னுள் பத்திரம்.
திரும்பும் வழியில் கந்தளாய்
குளத்தருகே
சில நிமிடம் நிற்கிறேன்.
என்றோ ஒரு நாள்
என் நண்பன் கல்லொன்று
வீசிச்சென்றான் இங்கு.
அதே இடத்தில் நின்று
ஒரு கல்லை
வீசி விட்டு திரும்புகிறேன்
நீருக்குள் இக்கல்
என் நண்பன் கல்லுக்கு
அருகிலேயே கிடக்கும்
என்றநம்பிக்கையில்.

அன்புடையீர்..

அன்புடையீர்..
அழகு நிலையத்திலிருந்து
வெளிவரும்பெண்களிடம்
காதலைச் சொல்லாதீர்.
அவர்களில் ஒருவர்
உங்கள்
பாட்டியாகக்கூட
இருக்கலாம்.

சிறப்புத் தரிசனம்

சிறப்புத் தரிசன
கட்டண வரிசை பக்தர்களுக்காய்
மணிநேரம் கடவுளிடம்
பரிந்துரை செய்யும் பூசாரி
அறிவதில்லை
அந்நேர 'இடைவேளை'களில்தான்
காற்று வாங்க
சாமிகள் சற்று
வெளியே செல்கின்றன
என்பதை.

தினமும் பெற்றோல்

தினமும்
பெற்றோல் ஊற்றி
தீக்குளிக்கும்
என் சிறு திரு.
சே...................!
பேசாமல் குரங்குகளாகவே
இருந்திருக்கலாம்.
சும்மா தாவியே செல்வேன்
வேலைக்கு.