என் ஊருக்கு சென்றிருந்தேன்.
பாதியிலே நிறுத்தப்பட்ட
ஓவியமாய்
வர்ணம் குன்றி மௌனம் காத்தது.
கூட்டம் தொலைத்ததொருபறவையென
சிறகுகள் விரித்தபடி
நடந்து செல்கிறேன்.
சரித்து வைக்கப்பட்டமிக நீண்ட
பியானோவைப்போல்
தெருவோர தொடர்மதில்கள்
என் பதின்வயது ராகங்களை
மீட்டியபடி.
காற்றில் பேரோசையுடன்
அலைகின்றன
என் நண்பர்கள் விட்டுச் சென்ற
வார்த்தைகள்.
அவர்கள் தந்து போன
இரவிலும் அழியா
வானவில் சித்திரம்..
என்னுள் பத்திரம்.
திரும்பும் வழியில் கந்தளாய்
குளத்தருகே
சில நிமிடம் நிற்கிறேன்.
என்றோ ஒரு நாள்
என் நண்பன் கல்லொன்று
வீசிச்சென்றான் இங்கு.
அதே இடத்தில் நின்று
ஒரு கல்லை
வீசி விட்டு திரும்புகிறேன்
நீருக்குள் இக்கல்
என் நண்பன் கல்லுக்கு
அருகிலேயே கிடக்கும்
என்றநம்பிக்கையில்.