எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது இன்று மாலை 6.42 வரை.
பொதுவாக,வானத் திரையரங்கில் இரவுக் காட்சி தொடங்கும் நேரத்தில்தான் மைதானம் செல்வது வழக்கம்.இருட்டினுள்,Bat man போல்,அங்குமிங்கும்,உடற்பயிற்சி என்ற பெயரில் ஓடி,அனைவரையும் திகிலூட்டுவது எனது வாடிக்கை.
இன்றும் அவ்வாறே.
ஓடுவதற்கான முஸ்தீபு நடவடிக்கைகளில் இருந்த வேளையில்..,
" அங்கிள்! நேரம் என்ன? "
குரல் வந்த திசை பார்த்தபோது, ஓ லெவல் முடித்து ஏ லெவலுக்காய் காத்திருக்கும் 'லுக்'கில் ஒரு சிறுவன்(?).
நேரத்தை எவன் பார்த்தான்!
அவன் 'அங்கிள்' என்றது மட்டும் அசரீரி போல்,மீண்டும் மீண்டும் ஒலித்தது.
இருளில்,என் முகம் சரிவரத் தெரியவில்லையாக்கும் என்ற நப்பாசையுடன்,அவன் அருகில் சென்று,காது கேளாதவன் போல்,
" என்ன ?" என்றேன்.
" டைம் என்ன அங்கிள்? " என்றான் அந்த கல்நெஞ்சன்!
காலத்தின் வாகனம்,தன் சில்லுகள் பதிய,என்னில் ஏறி இறங்கியிருப்பது புரிந்தது.
" 6.42!!! "
" தாங்ஸ் அங்....." . போய் விட்டான்(உயிர் தப்பி!).
இந்தக் காலம் தான் எவ்வளவு அநீதியானது..?!
அட!நேற்றுத்தானே physics class முடிஞ்சு வரும்போது, முன் மண்டை ஜொலிக்க வந்த, ஒரு பெரிசுவை ,
"அங்கிள்! Bell மூடி, கண்ணைக் கூசுது " என்றோம்..!
அதற்குள் இன்றைக்கு இப்படியா??!!
பரவாயில்லை. அண்ணன் ஜன்ஸ்டீனை நம்பி,நாளையில் இருந்து, ஒளி வேகத்தில் ஓட இருக்கிறேன்......!!!!