Monday, 20 May 2013

பட்ட மண்ணில் இட்ட விதைகள்..


அம்மா.....!
சிலுவை அறியா சிறு வயதில்
நெஞ்சில் இட்டாய்
பல விதைகள்.

பொய்கள் சொன்னால்
புரளாது நாக்கு என்றாய்.
புகழுடையோன் மேல் பொறாமை
கண்ணைக் குத்தும் சாமி என்றாய்.
அடுத்தவன் நிலம் அபகரித்தால்
நடக்காது கால்கள் என்றாய்.
சக மனிதன் வீழச் சதிகள்
சாக்கடைதான் முடிவில் என்றாய்.
கூடி நின்று குத்தி விடும் துரோகம்
மீளா நரகம் வாழ்க்கை என்றாய்.
நீதி வழி நடந்தால்
நேரும் பல மேன்மை என்றாய்.
ஊருக்கு உழைத்தால்
உனக்கே உயர்வு என்றாய்.
நட்பு தேடி வளர்த்தால்
நம்பிக்கையில் நாளை என்றாய்.

பொய்கள் பல சொன்னாயம்மா..!
உண்மை அறைந்து
புலம்புகிறான்
உன் மகன்!

பட்ட நிலத்தில்
இட்ட விதைகள்
பயனேது கூறு ?!



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.